Wednesday, 1 August 2012

Importance of Sankatahara Chaturthi explained in tamil



   
                                    சங்கட ஹர  சதுர்த்தி பலன் 
                        ***********************************************  

    
           சதுர்த்தி திதி சுக்ல சதுர்த்தி , கிருஷ்ண சதுர்த்தி என இருவகைப்படும். கிருஷ்ண  சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் சமயம் சங்கடஹர சதுர்த்தி எனப்படும். இந்த சதுர்த்தியில்  விநாயகரை  பூஜிப்பவர்கள் கஷ்டங்களிலிருந்து விடுபடுகிறார்கள். மாசி மாத  கிருஷ்ணபட்க்ஷ சதுர்தியே  விநாயகரின் பிறந்த தினம். ஆவணி மாத சுக்ல சதுர்த்தியில் யாரும் சந்திரனைப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்ப்பவர்கள் பாபத்தை அடைகிறர்கள். ஆனால் கிருஷ்ண பட்க்ஷ சதுர்த்தியில் மட்டும் சந்திரனுக்கும் அர்க்கியம் தர வேண்டும். அப்பொழுதான் இந்த சதுர்த்தியின் பலன் முழுமையாகக் கிடைக்கும்.
         ஒரு சமயம் யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணன் சுக்ல சதுர்த்தியில் சந்திரனைப் பார்த் துவிட்டான். அதனால் பாபத்தின்  எதிரொலியாக யாதவகுல ராஜரிஷியான  "சத்ராஜித் " என்பவரின் கழுத்தில்  உள்ள  ச்யமந்தக  மணியை தான் அடைய ஆசைப்பட்டான். அந்த மணியை ராஜரிஷியானவர் சூரியனை வேண்டி அவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்அந்த மணி நிறைய தங்கத்தைக் கொடுக்கும் சக்தி படைத்தது. கிருஷ்ணன் அந்த மணியை ராஜாவான உக்கிரஸேனனிடம் கொடுத்துவிடுங்கள்இந்த  தங்கம் கொடுக்கும் மணியினால் ரிஷியான உங்களுக்கு எந்த  உபயோகமும் இல்லை என்று கூறினான். ஆனால் அந்த ரிஷி தான்  ஏற்கனவே தன் தம்பியான ப்ரஸேனனுக்கு அதை கொடுத்துவிட்டேன் . அவன் அதைத் தரமாட்டான் என்று சொன்னார்.
          சில நாள் கழித்து கிருஷ்ணன் தன் யாதவகுல நண்பர்களுடன் ப்ரேஸனனையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். ப்ரஸேனன் இவர்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான். அங்கு தனிமையில் இருந்த ப்ரஸேனனை  ஒரு சிங்கம் கொன்று விட்டு அந்த மணியை கொண்டு சென்றது. பிறகு  ஜாம்பவான் என்ற கரடி  சிங்கத்தைக் கொன்று , மணியை அபகரித்து , தன் மகளான ஜாம்பவதியிடம் கொடுத்தது. உனக்கு மணமானதும் உன்  துணைவனுக்கு  இதைப் பரிசாகத் தருவேன் என்றும் கூறியது.
         இந்த சூழ்நிலையில் ப்ரஸேனனைக்  காணாத கிருஷ்ணனும் அவன் நண்பர்களும் வீடு திரும்பினர். அதனால் ப்ரஸேனன் சகோதரரான சத்ராஜித்திற்கு சந்தேகம் வந்தது. அவர் கிருஷ்ணன் என் சகோதரனைக் கொன்றுவிட்டு மணியையும் அபகரித்து விட்டான் என்று ராஜாவான உக்ரஸேனனிடம் முறையிட்டார். கிருஷ்ணனை எல்லோரும் திருடன் கொலைகாரன் என்று பழித்தனர். ராஜா கிருஷ்ணனிடம் யாரும் பேசக்கூடாது என்றும் அவனை ஒதுக்கி வைக்கவேன்டும் என்றும் ஆணையிட்டார். கிருஷ்ணன் மிக மன வேதனையுடன், தானும் மனிதர்களைப் போல் வீண்பழிக்கு ஆளாகிவிட்டோமே  என்று கவலைகொண்டு , எப்படியும் ப்ரஸேனனையும் மணியையும் கண்டு பிடிக்கவேண்டும் என நினைத்து சில நண்பர்களுடன் காட்டிற்குச் சென்றான். குதிரைகளின் காலடிச் சுவட்டைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். சில தொலைவு சென்றவுடன் குதிரையும் ப்ரஸேனனும் இறந்து கிடப்பதைப் பார்த்தான். அருகில் ஒரு சிங்கத்தின் அடிச்சுவட்டையும் பார்த்தான். ப்ரஸேனன் மரணமடைந்தது கண்டு மனம் வருந்தினான். ஆனால் மணி அங்கு இல்லை. உடனே அவன் சிங்கத்தின் அடியைத் தொடர்ந்து சென்றான்சிறிது தொலைவு சென்றதும் ஒரு சிங்கம் இறந்து கிடப்பதையும் அருகில் ஒரு கரடியின் காலடியையும் பார்த்தான். மணி எங்கேயாவது கிடக்கிறதா என்று  சுற்றிலும் தேடினான். அங்கும் மணி கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் கரடியின் காலடியைத் தொடர்ந்து  சென்றான். அது ஒரு குகை வாயிலில்  கொண்டு சென்றது
          கிருஷ்ணன்  தன் நண்பர்களை உள்ளே வரவேண்டாம்  எனக் கூறிவிட்டு தான் மட்டும் குஹையினுள் நுழைந்தான். கொஞ்ச தூரம் போனதும் , அங்கே மிக மிக அழகான ஒரு பெண் ,தொட்டிலில் ஆடிக்கொண்டு இருப்பதையும் , அந்த தொட்டிலின் நடுவில் தான் தேடி வந்த மணி கட்டியிருப்பதையும் பார்த்தார். உடனே கிருஷ்ணன் , ப்ரஸேனனைக் கொன்ற , சிங்கத்தைக் கொன்ற , ஒரு கரடியே  இந்த மணியை இங்கு கொண்டு வந்திருக்கிறது என்று பொருள் படும்படியான ஒரு பாட்டை பாடிக்கொண்டே  தொட்டிலின் அருகில் சென்றார்.
         இதைப் புரிந்து கொண்ட அந்தப் பெண்  கிருஷ்ணனின் அழகில் மயங்கி அந்த மணியை அவரிடம்  கொடுத்து உடனே போய் விடுங்கள் , என் தந்தை வந்தால் உங்களைக் கொன்று விடுவார் என்று கூறினாள்கிருஷ்ணன் உடனே தன் சங்கை எடுத்து ஊதினார். சங்கின் ஒலி கேட்ட அந்த கரடி ( அவரே ஜாம்பவான் ) யாரடா அது என் குஹைக்குள்? நீ எப்படி இங்கு வந்தாய் என்று கூறி சண்டையிட ஆரம்பித்தார். இந்த சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில் குஹை வெளியில் காத்திருந்த கிருஷ்ணனின் நண்பர்கள் குஹையினுள் போன கிருஷ்ணன் இறந்து விட்டான். இனிமேல் வரமாட்டான் என்று துவாரகைக்குத் திரும்பினர்.  
           கிருஷ்ணனுக்கும் ஜாம்பவானுக்கும் 21 நாட்கள் தொடர்ந்து யுத்தம் நடந்தது. வெற்றி தோல்வியில்லாமல்  இருந்த நிலையில் , ஜாம்பவான் தன்னுடய பூர்வ ஜன்மத்தை நினைத்துப் பார்த்தார். உடனே சண்டை போடுவது சுந்தர ரூபனாக இருப்பதால் அது மஹாவிஷ்ணுவே எனத் தெரிந்து கொண்டார். உடனே அந்த மணியை கிருஷ்ணனிடம் தந்தார். தன் மகளான ஜாம்பவதியையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். கிருஷ்ணனும் ஜாம்பவதியை ஏற்றுக்கொண்டார்.   கிருஷ்ணன் ஜாம்பவதியுடன் துவாரகை போனார். மணியை சத்ராஜித்திடம் கொடுத்தார். சத்ராஜித் மனம் சந்தோஷப்பட்டு , தன் மகளான சத்யபாமாவையும் மணியையும் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். ஆனால் கிருஷ்ணன் சத்யபாமாவை மட்டும் மனைவியாக ஏற்று , மணியை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.   கிருஷ்ணன் சத்ராஜித் மகளை  (சத்யபாமா) மணந்ததைக் கேட்ட சததன்வா,அக்ரூரர்,க்ருதவர்மர் ஆகியோர்  மிகுந்த கோபம் கொண்டு , கிருஷ்ணன் இல்லாத சமயம் பார்த்து சத்ராஜித் உறங்கும் வேளையில் அவரைக் கொன்று விட்டு மணியை திருடிச் சென்றனர்.
          தான் இல்லாத சமயம் நடந்த இந்த கொடிய சம்பவம் கேட்டு , பலராமனும், கிருஷ்ணனும் ஹஸ்தினாபுரத்திலிருந்து துவாரகைக்கு வருவதை அறிந்த சததன்வா,  மணியை அக்ரூரர்,கிருதவர்மரிடம் தர முயன்றார். அவர்கள் கிருஷ்ணனுக்கு பயந்து அதை வாங்க மறுத்தனர். ஆனால் சததன்வா மணியை அக்ரூரரிடம் தூக்கி எறிந்துவிட்டு , தன் குதிரையில் தப்பித்து ஓடினான். கிருஷ்ணன்  சததன்வாவைத்  துரத்திப் பிடித்து கொன்றுவிட்டான் . ஆனால் மணி அவனிடம் இல்லை. மணியுடன் வராத கிருஷ்ணனை எல்லோரும் மணியைத் தானே மறைத்துக் கொண்டு , திருடாத சததன்வாவை அனாவசியமாகக் கிருஷ்ணன் கொன்றான் என்று பழி சுமத்தினர். கொலைகாரன் என்று பட்டமும் சூட்டினர். கிருஷ்ணன் இதை நினைத்து நினைத்து மனிதர்களைப் போல் நானும் இப்படி வீண் பழி பாவத்தைச் சுமந்தேனே , என்று மனம் வருந்தி அழுதுகொண்டு இருந்தான்.
         சில நாட்கள் சென்றது. ஒரு  நாள் நாரத மாஹாமுனிவர்  துவாரகைக்கு வந்தார். கிருஷ்ணன் மன வருத்தத்தில் இருப்பதுகண்டு  "கிருஷ்ணாஉலகத்தைக் காக்கும் கடவுள் நீ. உனக்கு ஏதப்பா இவ்வளவு கஷ்டம் ?" என்று கேட்க, கிருஷ்ணன் நடந்தவகைகளைக்  கூறினார். நாரதரும் தன் ஞானதிருஷ்டியால் அறிந்து  " சுக்ல சதுர்த்தியில்   கணேசனால் சபிக்கப்பட்ட   சந்திரனை,  நீ பார்த்ததால் ஏற்பட்ட  கஷ்டங்களே இவை  " . ஆகவே நீ  உடனே அந்த வினாயகரை நினைத்து , சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து பூஜிப்பாய். உன் கஷ்டமும், பழியும் , துன்பமும், வேதனையும் நீங்கும் என்று சொல்லிச் சென்றார். கிருஷ்ணனும் கணேசனை முறைப்படி பூஜிக்க , வினாயகர் அவர் முன் காட்சி அளித்துதோஷமும், பழியும் , வேதனையும் , துன்பமும், கஷ்டங்களும் நீங்கட்டும் என்று  அருள்  செய்தார். கிருஷ்ணனும் " ஆவணி மாத சுக்ல பட்க்ஷ சதுர்த்தியில் சந்திரனைப் பார்தவர்களது தோஷம் , கிருஷ்ண பட்க்ஷ சதுர்த்தி பூஜையால் , அந்த தோஷம் வராமலிருக்க தாங்கள் அருள் செய்ய வேண்டும் "என கேட்டுக் கொண்டார். விநாயகரும் அதற்கு ''அப்படியே ஆகட்டும் " என்று அருள்  செய்தார்
          இதற்குப் பிறகு ஒரு நாள் அக்ரூரர் , யாதவர்களுடய  சபைக்கு வந்து , சததன்வா செய்தவைகளைக் கூறி , மணியை கிருஷ்ணனிடம் கொடுத்தார். மிக மகிழ்ச்சியுடன் மணியை பெற்றுக் கொண்ட கிருஷ்ணன் பழி  நீங்கப் பெற்று , ஆனந்தமடைந்தார். எல்லோரும் சந்தோஷமடைந்தனர்.
         அதனால்  ஒருவரும் ஆவணி மாத சுக்ல பட்க்ஷ சதுர்த்தியில்  சந்திரனைப் பார்க்கக் கூடாது. அதே  சமயம் க்ரிஷ்ணபட்க்ஷ சதுர்த்தி ( அதாவது ஸங்கடஹர சதுர்த்தி )விரதம் இருந்து , பூஜை செய்து , சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்தால் கஷ்டம், துன்பம், பழி, வேதனை, குறைகள் யாவும் தீரும் என்பது நிச்சயம் . 
   
                                         கணேசனே துணை


          
                               

1 comment: